Friday, 18 October 2013

யாரிடம் எப்படி பேச வேண்டும்

தாயிடம் அன்பாகப் பேசுங்கள்; தந்தையிடம் பண்பாகப் பேசுங்கள்; துணைவியிடம் உண்மையைப் பேசுங்கள்; சகோதரியிடம் பாசமாகப் பேசுங்கள்; சகோதரனிடம் அளவாகப் பேசுங்கள்; குழந்தையிடம் செல்லமாகப் பேசுங்கள்; உறவினரிடம் பரிவாக பேசுங்கள்; நண்பர்களிடம் உரிமையோடு பேசுங்கள்; வியாபாரியிடம் கராராக பேசுங்கள்; வாடிக்கையாளரிடம் நேர்மையாக பேசுங்கள்; அரசியல் மட்டும் ஜாக்கிரதையாக பேசுங்கள். கடவுளிடம் மவுனமாக பேசுங்கள்! புரிந்து பேசுங்கள் புரியும்படி பேசுங்கள்! வாழ்வதற்காக பேசுங்கள்! வாழ்க்கையைப் பற்றி பேசுங்கள்

Saturday, 21 September 2013

வடக்கே தலை வச்சா என்னாகும்

அ-
+


Temple images
இந்த காலத்துப் பிள்ளைகளில் ஒரு பகுதியினர் பெரியவர்கள் பேச்சைக் கேட்பதில்லை. வடக்கே பார்த்து தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர்கள் கண்டித்தால், நீ பழைய பஞ்சாங்கம்! எங்கே தலை வைத்தால் உனக்கென்ன!என்று குரலில் கேலியைக் குழைத்து பேசுகிறார்கள்.  பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்தாராம். போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி கூறினாராம். ஒரு யானை வடக்கே தலை வைத்து படுத்திருந்ததாம். அதன் தலையைக் காண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம். இதெல்லாம் புராணக்கதை என்று நம் பிள்ளைகள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால், இந்தக் கதைக்கு அறிவியல் பின்னணியே காரணம். பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம். அதனால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால், குழம்பிய மனநிலை உருவாகும். ஆழ்ந்த தூக்கம் உண்டாகாது. தூக்கம் கெடும்போது உடல்நலம் பாதிக்கும். உயிர் பிரிந்ததும் வடக்கு நோக்கி படுக்க வைப்பது நம் மரபு. சமண சமயத்தில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் உயிரை விட எண்ணினால்,வடக்கிருத்தல் என்ற விரதத்தை மேற்கொள்வர். இதற்குசள்ளேகனம் என்றும் பெயருண்டு. நட்புக்கு இலக்கணம் வகுத்த பிசிராந்தையாரும், கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தியை பழந்தமிழ் இலக்கியம் கூறுகிறது.  அறிவியல் செய்தியை படித்தவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பாமரர்கள் புரிந்து கொள்ளவே, பிள்ளையார் பற்றிய புராணக்கதையை பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். புரிகிறதா!

Tuesday, 23 July 2013

சோதனைக்குழாய் குழந்தை பற்றி.. ஆன்மிகமும் அறிவியலும்

சோதனைக்குழாய் குழந்தை இன்றைய அறிவியல் தான்,  சோதனைக்குழாய் பிறக்க காரணமாக இருந்ததாக பெருமையடித்துக் கொள்பவர்கள், அந்தப் பெருமையை  நம் முன்னோருக்கு அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். மகாபாரதத்தில் காந்தாரி என்ற பாத்திரம்  வருகிறது. இவள் திருதராஷ்டிரனின் மனைவி. சகுனியின் சகோதரி.  கணவனுக்கு கண்தெரியவில்லை என்பதற்காக, தன் கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்வின் இறுதிநாள் வரை அவிழ்க்காத மாதரசி. இவள் தனது கர்ப்பத்தை 108 பானைகளில் போட்டு  மூடி வைத்தாள். அவற்றில் பல மூலிகைகள் இருந்தன. அந்த மூலிகைகளைக் கொண்டே 100 மகன்களையும், ஒரு மகளையும் பெற்றாள். அப்படியானால், இதிகாச காலத்திலேயே நமது தேசம் இதற்கான அடிகோலை இட்டுவிட்டது. அது போகட்டும்! சரித்திர காலத்திற்கு வருவோம். மவுரியர்களின் ஆட்சிக்காலம் நம் தேசத்தில் நடந்த வேளை...சந்திரகுப்தன் என்ற புகழ்பெற்ற அரசரின் மனைவி கர்ப்பமானாள். கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென இறந்துவிட்டாள். ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே! ராணி, இறந்துபோன சில நிமிடங்களுக்குள் அவளது கருப்பையிலிருந்து கருவை எடுத்தார் அரண்மனை வைத்தியர்  சுஸ்ருதர் என்பவர். அந்தக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையில் செலுத்தினார். பத்துமாதங்கள் பாதுகாத்தார். ஆட்டின் வயிற்றில் இருந்து அழகான குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தையே பிந்துசாரர். பிந்துசாரம் என்றால் ஆடு அல்லது மான். எவ்வளவு பெரிய அற்புத சாதனை!  விஞ்ஞானத்தை நம்மிடமிருந்து தான் பிறநாடுகள் கற்றுள்ளன. ஆனால், அவர்கள் நல்ல நேரம்...அவர்களை நாமும் பாராட்டிக் கொண்டிருக்கிறோம் என்பது தான்!

Wednesday, 12 June 2013

எல்லோரும் விவேகானந்தர் தான்

கோயிலுக்குச் செல்வது, கடவுளிடம் விருப்பத்தைச் சொல்லி வேண்டுவது, நிறைவேறினால் நேர்த்திக்கடன் செலுத்துவது இவற்றைத் தான் பக்தி என நினைக்கிறோம். ஆனால் "சுத்த பக்தி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. சுத்த பக்தர்கள் ஒருபோதும் உலக இன்பங்களை நாடி ஓடுவதில்லை. சொர்க்கவாழ்வு வேண்டும் என்று கடவுளிடம் கேட்பதில்லை. தண்டனையிலிருந்து தப்பிக்க விரும்புவதில்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், பக்திக்காகவே பக்தி செலுத்தும் அருளாளர்களே சுத்த பக்தர்கள். ராமகிருஷ்ணர், சாரதாதேவியார், விவேகானந்தர் போன்றவர்கள் இத்தகைய உன்னத நிலையில் வாழ்ந்தனர். ஏன்...நாமும் ஆசையற்ற பக்தியை வளர்த்துக் கொள்ளக்கூடாது?

Saturday, 23 March 2013

அடி உதவுவது போல.. பழமொழியின் பொருள் தெரியுமா

பெருமாள் கோயிலில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதன் தத்துவத்தை உணர்ந்து சடாரியை ஏற்பது அவசியம். ஆழ்வார்களில் நம்மாழ்வார் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு மாறன் சடகோபன் என்றும் பெயருண்டு. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் இவரை, நம் சடகோபன் என்று அன்போடு அழைத்ததால் நம்மாழ்வார் என்னும் சிறப்பைப் பெற்றார். பெருமாளின் திருவடியாகவே இவரைப் போற்றுவர். இதன் அடையாளமாக, தரிசனத்தின்போது பக்தர்களின் தலையில் சடாரி வைப்பது வழக்கம். சடாரியின் மேலே பெருமாளின் திருவடிகள் இடம்பெற்றிருக்கும். இதைத்தான், அடி உதவுவதுபோல, அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்று பழமொழியாகச் சொல்வார்கள். அடி என்பது கடவுளின் திருவடிகளைக் குறிக்கும். பெருமாளின் திருவடி சம்பந்தம் நம்மைக் கரை சேர்க்கும் என்பதே சடாரி ஏற்பதன் நோக்கம்

Thursday, 21 March 2013

இறைவனுக்கு சாப்பாடு அவசியமா

ஐயையோ! இவ்வளவு பாலைக் கொண்டு போய், சுவாமியின் தலையில் கொட்ட வேண்டுமா! இந்தியாவின் பொருளாதாரத்தை வீணடிக்கிறீர்களே! நாலு குழந்தைகளுக்கு இதைக் கொடுத்தால் பசியாறுமே! என்று எச்சில் கையால் காக்கை ஓட்டாத நாத்திகன் பேசுவான். ஏன்...நாத்திகம் பேசாதவர்களுக்கு கூட இதில் ஏதோ நியாயம் இருப்பது போல் தெரிகிறது. சுவாமிக்கு கொழுக்கட்டை, புளியோதரை, தயிர்சாதம் படைத்தால், இதை மட்டும் அந்த சுவாமி நேரில் வந்து எடுத்து சாப்பிடட்டும்.அப்புறம் யாராவது நிவேதனம்செய்கிறானா பார்க்கலாம், என்று மார் தட்டுபவர்களும் பூமியில் உண்டு.
இந்த நிவேதனம், அபிஷேகமெல்லாம் எதற்கு? இதை பக்தன் செய்யாவிட்டால் பகவான்சாப்பிடாமல் போய் விடுவானா! அல்லது யாரிடமாவது இதை நீ எனக்கு நிவேதனம் செய்தே ஆக வேண்டுமென கட்டாயப்படுத்தினானா?நிவேதனம் என்றால் அர்ப்பணித்தல். வெறும் சோறும் கறியும் இறைவனுக்கு படைப்பது நிவேதனமல்ல! நம் ஆத்மாவைஇறைவன் முன்னால் வைத்து, இதை நீ ஸ்வீகரித்துக் கொள் என்று சொல்ல வேண்டும். நானே ஒருவகை அன்னம் (சோறு) தான். இந்த அன்னத்தை நீ எடுத்துக் கொள், என்று கெஞ்ச வேண்டும். இவ்வாறு, ஆத்மாவை அவன் முன்னால் வைக்க வேண்டுமானால் மனப்பக்குவம் வர வேண்டும். அந்த பக்குவத்தை வரவழைப்பதற்கான பயிற்சி தான் சுவாமிக்கு உணவு படைப்பது.

Friday, 1 March 2013

ஊரில் கோயில் கோபுரமே உயரமாக இருக்க வேண்டும் என்பது ஏன்?

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?...
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.
கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.
இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.
அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்!
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது